கொல்லைப்புற இரகசியம் - பகுதி 30

“எள்ளுக்கு ஏழு உழவு
கொள்ளுக்கு ஓர் உழவு
எண்ணிக்கை தவறிப்போனா
கரைசேராது குடி வாழ்வு!”

பழமொழியை ராகமிட்டு படித்தபடி சொளவில் புடைத்து வைத்திருந்த எள்ளை எடுத்து, தண்ணீரில் ஊற வைத்துக்கொண்டிருந்தாள் உமையாள் பாட்டி!

தொடர்ந்து மூணு நாள் நல்லெண்ணெய் குளியல் முறைப்படி செஞ்சா கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர் வடிவது, கண் கூச்சம், மண்டை குத்தல் மாதிரியான பிரச்சனையெல்லாம் தீரும்.

“என்ன பாட்டி எதோ விரக்தியா பாட்டுப் பாடிக்கிட்டு இருக்குற மாதிரி தெரியுதே!” பாட்டியிடம் கேட்டவாறே அவள் பக்கத்திலிருந்த அந்த மரப்பலகையில் அமர்ந்தேன்.

“வாப்பா... வா! சென்னை போயிருந்ததா சொன்னாங்க, எப்போ வந்த...? சத்த அந்த வாளியில இருக்குற எள்ள இந்த சொளவுல கொட்டேன்!” பாட்டி என்னை விசாரித்தபடியே அவளது வேலையில் கருத்தாகவும் இருந்தாள்.

“அத ஏங்கேக்குறீங்க பாட்டி... போன வாரம் வீசுன வர்தா புயல் அடிச்ச அடி தாங்கமுடியாம சென்னை மக்கள் பாதிப்பேர் ஊர்ப்பக்கம் கிளம்பி வந்துட்டாங்க பாட்டி! மரங்கள் நிறைய சாஞ்சுபோச்சு!”

“அதப்பத்திதான் நான் பாட்டு பாடிக்கிட்டு இருந்தேன்ப்பா!”

“அதப்பத்தியா... எதோ எள்ளு கொள்ளுனு படிச்சிட்டு இருந்தீங்களே?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“எள்ளுனாலும் சரி, கொள்ளுனாலும் சரி, பெரிய மரங்களானாலும் சரி வேர்கள் ஆழமா ஊன்றி வளரனும். இல்லாட்டி இப்படித்தான். புயலை எதிர்த்து தாங்கி நிக்குறதுக்கு நம்ம மண்ணுக்கு ஏத்த நாட்டு மரங்கள நடுறதுதான் இதுக்கு ஒரே தீர்வு!”

“ஓஹோ... அதுக்காகத்தான் ஒவ்வொரு செடிவகைக்கும் கூட இத்தன உழவு உழுகணும்னு சொல்லி வச்சிருக்காங்களா?! சரி... இந்த எள்ளெல்லாம் என்ன செய்யப் போறீங்க பாட்டி!” பாட்டி என்னிடம் எள் தரும் பலன்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும் வேறேதும் புதிதாக சேதி கிடைக்குமா எனப் பார்ப்பதற்காகவே கேட்டேன்.

“எள்ளுல இருந்து கிடைக்குறதுதான் நல்லெண்ணெய் அது முதல்ல தெரியுமாப்பா உனக்கு?”

“ஓ நல்லெணெய் நல்லா தெரியும்பாட்டி! நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். இதெல்லாம் நீங்க கொஞ்ச நாள் முன்னாடி ஏங்கிட்ட ஷேர் பண்ணிட்டீங்க பாட்டி! இப்போ எதாவது புது பாய்ண்ட் இருக்குதா?”

“ஓஹோ ஏற்கனவே நல்லெண்ணெய் பத்தி சொல்லியிருக்கேனா... அது சரி! புது பாய்ண்ட்னா... ம்... ஒன்னு சொல்றேன், தொடர்ந்து மூணு நாள் நல்லெண்ணெய் குளியல் முறைப்படி செஞ்சா கண்சிவப்பு, கண்வலி, கண்ணில் நீர் வடிவது, கண் கூச்சம், மண்டை குத்தல் மாதிரியான பிரச்சனையெல்லாம் தீரும். அப்புறம் ஆயில் புல்லிங் பண்ணலாம்ப்பா!

“ஆயில் புல்லிங்னா என்ன பாட்டி?”

“தினமும் காலையில நல்லெண்ணெய் 10 மிலி அளவு வாயில இட்டு கொப்பளிப்பதனால உடல் ஆரோக்கியம் கிடைக்கும்னு மருத்துவர்கள்லாம் சொல்றாங்க. இதுக்கு பேருதான் "ஆயில் புல்லிங்'! விடியற்காலையில எழுந்து, பல் துலக்கிட்டு, வெறும் வயித்துல, சுத்தமான நல்லெண்ணெய இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில விட்டு, வாய் முழுவதும் பல் இடைவெளியெல்லாம் ஊடுருவிச் போகுறமாதிரி நல்லா கொப்பளிக்கணும். இப்படி 15லிருந்து 20 நிமிடம் வரைக்கும், தொடர்ந்து கொப்பளிக்கணும். அப்புறம் அந்த எண்ணெய துப்பிட்டு, தண்ணியில கொப்பளிச்சு வாயையும், பற்களையும் நல்லா கழுவிடலாம். அப்புறம் தேவைப்பட்டா தண்ணி தேவையான அளவு குடிச்சிக்கலாம்.

“இப்படி செஞ்சா என்ன பலன் பாட்டி?”

“மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல், சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், வயிறு-குடல் நோய்கள், மலச்சிக்கல்... இப்படி பல நோய்கள் அண்டாதுனு சொல்றாங்க. அதோட இரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்துவதா சில மருத்துவர்கள் சொல்றாங்க.”

“ஓ சூப்பர்! வேற எதாவது எள் பத்தி சொல்லாம விட்டிருக்கீங்களா?”

“எள்ளோட காய் இல்லாட்டி அதோட தோல்பகுதிய எடுத்து உலர்த்தி, சுட்டு சாம்பலாக்கி புண்கள் மேல பூசி வந்தா சீக்கிரம் புண் ஆறும். அப்புறம் எள்ள பக்குவப் படுத்தி பொடி செஞ்சு சாப்பிட்டுல சேத்து சாப்பிடலாம். நல்ல உடல் வலிமை உண்டாகும்.”

“ஓ இது தெரியுமே! நம்ம ஈஷா ஆரோக்கியாவுலயே கிடைக்குதே... எள்ளு சாதப்பொடி!”

பாட்டி பக்குவம் செய்து வைத்திருந்த எள்ளை அருகிலிருந்த உரலில் இட்டு, உலக்கையை வைத்து குத்தியபடியே ஒரு அழகிய கும்மிப்பாட்டை பாடினாள். எள்ளின் மணமும் பாட்டியின் பாடலின் கிராமிய மணமும் என்னை மெய்மறக்கச்செய்தது!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்